முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை

Thursday, July 23, 2009

இடைத் தேர்தலில் கம்யூ. போட்டி



சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. நாளை திருச்சியில் இரு கட்சிகளும் இதை முறைப்படி அறிவிக்கவுள்ளன.

இந்த முடிவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தெரிவிக்கவும், இடைத் தேர்தல் புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்றும் கோரவும் அக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதை ஜெயலலிதா ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிட அந்தக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதன்மூலம் அதிமுக கூட்டணி பிளவுபடுவது உறுதியாகிவிட்டது.

அதிமுக தேர்தல் புறக்கணிப்பு முடிவை ஏற்று நாமும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் செயற்குழுக் கூட்டங்கள் நேற்று சென்னையில் தனித் தனியாக நடந்தன.

பின்னர் இரு கட்சிகளின் தலைவர்களும் சிபிஐ அலுவலகத்தில் சந்தித்து இடைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்தனர்.

தேமுதிக ஆதரவைக் கோர முடிவு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடைத் தேர்தலில் போட்டியிடுவது, இதை ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தெரிவித்து அவரது முடிவைக் கைவிடுமாறு கோருவது, அது சரிவராவிட்டால் தனித்துப் போட்டியிடுவது, தேவைப்பட்டால் தேமுதிகவுடன் பேச்சு நடத்தி அவர்களின் ஆதரவைப் பெறுவது என தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும் நேற்றைய முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சியில் நாளை எங்களது கட்சியின் செயற்குழு நடைபெறுகிறது. அப்போது முடிவு எடுக்கப்படும் என்றார்.

அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாளை திருச்சியில் செயற்குழுவைக் கூட்டியுள்ளது. அப்போது முடிவு எடுக்கப்படும்.

இடதுசாரிகளின் திட்டம் இதுதான்...

- இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நேரில் சென்று தெரிவித்து அவரையும் முடிவை வாபஸ் பெறச் செய்யுமாறு வலியுறுத்துவது.

-
ஜெயலலிதா மறுத்து விட்டால் ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுவது. ஐந்து தொகுதிகளிலும் தங்களுக்கு ஆதரவு மட்டும் தருமாறு ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொள்வது.

-
சிபிஐ பர்கூர், ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிடும். மார்க்சிஸ்ட் கட்சி மீதமுள்ள இளையாங்குடி, தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளில் போட்யிடுவது.

-
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நிறுத்துவது.

-
தேவைப்பட்டால் தேமுதிகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்தும் பரிசீலனை. இதுதொடர்பாக விஜயகாந்த்தையும் சந்தித்துப் பேசுவது.

இத்தனையும் குறித்து நாளை நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் இரு கட்சிகளும் முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கவுள்ளன.

ஜெயலலிதாவின் முடிவை சிபிஐ ஏற்க முன்வந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை என்றே தெரிகிறது. தேசிய அளவில் இரு கட்சிகளும் ஒரே அணியில் இருப்பதால் சிபிஎம் வழியில் செல்லும் முடிவையே சிபிஐ எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment