சீன உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்ட வெனிசுலாவின் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக சுற்றத் துவங்கியது.
தென் அமெரிக்க விடுதலையின் நாயகன் என்று அழைக்கப்படும் சைமன் பொலிவாரின் பெயரை அந்த செயற்கைக்கோளுக்கு வெனிசுலா அரசு சூட்டியது. 15 ஆண்டு காலம் விண்ணை வலம் வரவிருக்கும் இந்த செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான திட்டம் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
அனைத்து தென் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியத்தீவு நாடுகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும். தொலைத்தொடர்புத்துறையில் பெரும் அளவு மாற்றத்தை இந்த செயற்கைக்கோள் ஏற்படுத்தும் என்று வெனிசுலா தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நூரிஸ் ஓரிலா கூறியுள்ளார்.
வெற்றிகரமாக செயற்கைக்கோள் ஏவப்பட்டபிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ், பணம் பண்ணுவதற்காக முதலாளித்துவவாதிகள் செயற்கைக்கோள்களை ஏவுவார்கள். எங்கள் விடுதலையைப் பறைசாற்றுவதற்காகவே நாங்கள் இந்த செயற்கைக்கோளை ஏவியுள்ளோம்.
தென் அமெரிக்க மற்றும் கரீபிய மக்களுக்கு இந்த செயற்கைக்கோளை அர்ப்பணிக்கிறோம். முழுசுதந்திரத்தை நோக்கி செல்வதற்கான நடவடிக்கையாகவே இதைச் செலுத்தினோம். செயற்கைக்கோள் ஏவுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரியதை சீனா நிராகரித்தது நல்ல அம்சம் என்று கூறினார்.
தனது சொந்த உபயோகத்திற்காக 2013 ஆம் ஆண்டு மற்றொரு செயற்கைக்கோளை வெனிசுலா செலுத்த உள்ளது. சீன மண்ணிலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் 36 ஆயிரம் கி.மீ. தொலையில் பூமியை வலம் வரும். தெற்கு மெக்சிகோவிலிருந்து அர்ஜெண்டினாவின் தெற்குப்பகுதி வரை இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செயற்கைக்கோள் ஏவப்பட்டதை தொலைக்காட்சிகள் மூலம் சாவேஸ் பார்த்தபோது அவருடன் பொலிவியாவின் ஜனாதிபதி இவோ மொரேல்சும் இருந்தார்.
No comments:
Post a Comment